திருவள்ளூர்: 3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
திருவள்ளூர்: 3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரம்
Published on

திருவள்ளூர்,

சிப்காட் தொழிற்சாலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிப்காட் பகுதியில் நேற்று மாலை வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை காணாமல் போயுள்ளது. இதனையடுத்து காணாமல் போன குழந்தையை பெற்றோர், பொதுமக்கள் உதவியுடன் அந்த பகுதியில் தேடினர். அப்போது முட்புதரில் காயங்களுடன் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று உயிரிழந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 3 வயது குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசியது தெரியவந்துள்ளது. இதனிடையே பாலியல் வன்கொடுமை தொடர்பாக பீகாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். 3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com