திருவள்ளூர்: அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் நீக்கம்! - சசிகலா வேதனை

ஏழை, எளிய மக்களின் பசியை போக்கிய ஒரு உன்னதமான மக்கள் நலத்திட்டம் இது என சசிகலா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் நீக்கம்! - சசிகலா வேதனை
Published on

சென்னை,

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் சோழம்பேடு சாலையில் உள்ள அம்மா உணவகத்தின் முகப்பில் அம்மா உணவகம் என்ற பெயரின் அருகே இருந்த புரட்சித்தலைவி அம்மாவின் புகைப்படம் நீக்கப்பட்டு இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

“அம்மா உணவகம்" என்பது ஏழை, எளிய சாமானிய மக்களின் பசியை போக்கிய ஒரு உன்னதமான மக்கள் நலத்திட்டம் ஆகும். இந்தியாவிலேயே முதல் முறையாக மலிவு விலையில் உணவு வழங்கும் “அம்மா உணவகம்”திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்.

இதை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பார்வையிட்டு வியந்து பாராட்டியுள்ளன. அவர்களது மாநிலங்களிலும் செயல்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு அமைச்சர்களும் வந்து பார்வையிட்டுள்ளனர்.

மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும், கொரோனா போன்ற ஊரடங்கு நேரங்களிலும் தவறாமல் உணவளித்த ஓர் மகத்தான திட்டம்தான் அம்மா உணவகம்.

இத்தகைய சிறப்புமிக்க திட்டத்தை வகுத்து கொடுத்த புரட்சித்தலைவி அம்மாவின் புகைப்படத்தை அம்மா உணவகங்களிலிருந்து அகற்றுவது வருத்தமளிக்கிறது.

அம்மா உணவகங்களை கடந்த திமுக தலைமையிலான அரசு மூடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அமைந்துள்ள புதிய அரசு அதனை தொடர்ந்து செயல்படுத்த முன்வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே சமயம், மக்களுக்காக வாழ்ந்து, மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் புகைப்படத்தை மீண்டும் அம்மா உணவகங்களில் இடம்பெற செய்வது தான் ஏற்புடையதாக இருக்கும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com