திருவள்ளூர்: வீடுகளுக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் அடித்துக்கொலை

பொதுமக்கள் தாக்கியதில் புரோசெங்கி டோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர்: வீடுகளுக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் அடித்துக்கொலை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படு வருகின்றன. இங்கு வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே, அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் புரோசெங்கி டோஸ் (வயது 35). இவர் தனது மாநிலத்தை சேர்ந்த 5 பேருடன் திருவள்ளூருக்கு வந்துள்ளார். 6 பேரும் வெள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேரவிருந்தனர்.

இந்நிலையில், புரோசெங்கி டோஸ் மற்றும் அவருடன் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களுடன் சேர்ந்து நேற்று முன் தினம் இரவு ஒன்றாக மது குடித்துள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில் புரோசெங்கி டோஸ் அங்கிருந்து புறப்பட்டு பக்கத்து கிராமமான ஆர்.ஆர்.கண்டிகைக்கு சென்றுள்ளார்.

பாலியல் தொல்லை

அங்கு திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்த அவர் அங்கிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பாலியல் தொல்லை கொடுத்த புரோசெங்கி டோசை அடித்து விரட்டினர்.

ஆனாலும், புரோசெங்கி டோஸ் அங்கிருந்து செல்லாமல் மேலும் சில வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களிடமும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தட்டிக்கேட்க வந்த பொதுமக்களையும் புரோசெங்கி டோஸ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வடமாநில இளைஞர் புரோசெங்கி டோசை தாக்கினர். பொதுமக்கள் தாக்கியதில் புரோசெங்கி டோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த வடமாநில இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com