திருவள்ளூர்: மைனர் சிறுமிக்கு திருமணம் - வரவேற்பு நிகழ்ச்சியை அதிரடியாக நிறுத்திய காவல்துறையினர்

மைனர் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவதாகவும் காவல்துறைக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர்: மைனர் சிறுமிக்கு திருமணம் - வரவேற்பு நிகழ்ச்சியை அதிரடியாக நிறுத்திய காவல்துறையினர்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள குமரஞ்சேரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே மணப்பெண் இன்னும் திருமண வயது எட்டவில்லை என்றும், மைனர் பெண்ணிற்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவதாகவும் காவல்துறைக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மணப்பெண்ணின் ஆவணங்களை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அவருக்கு 16 வயது மட்டுமே நிரம்பி உள்ளது என்பதும், மைனர் சிறுமியான அவருக்கு 24 வயது இளைஞருடன் திருமண ஏற்பாடுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com