திருவள்ளூர்: ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் - கையும் களவுமாக பிடிபட்டார்

ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்: ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் - கையும் களவுமாக பிடிபட்டார்
Published on

திருவள்ளூரில் அரசு கையகப்படுத்திய இடத்திற்கு பணம் கொடுக்க 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல் திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்திய அரசு அதற்காக சுமார் 45 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக கொடுக்க வேண்டி இருந்தது. இந்த தொகையை பலமுறை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடம் கேட்டும் அவர் காலதாமதம் செய்துவந்த நிலையில், சுமார் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், இழப்பீட்டுத் தொகை 45 லட்சத்தை கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழிகாட்டுதலின் பேரில் முதல் கட்டமாக 75 ஆயிரம் ரூபாயை தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனுக்கு ஏஜென்ட்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் துரை ஆகியோர் உதவியுடன் வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி நிறுவன ஊழியர் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கணேசன் மற்றும் ஆய்வாளர் மாலா ஆகியோர் தலைமையிலான போலீசார் தனி வட்டாட்சியரை பிடித்து கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவருக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட 75 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏஜென்ட்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் துரை ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுவரை அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இதுபோன்று எவ்வளவு ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com