திருவள்ளூர்: பெண்ணை கொடூரமாக கொன்று 15 சவரன் நகை கொள்ளை

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண் கத்தியால் குத்திக்கொலை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மளிகை கடைக்காரர் மனைவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வனஜா (வயது 55) வீட்டில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், ராதாகிருஷ்ணன் மற்றும் வனஜா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

கழுத்தில் கத்திக்குத்து

நேற்று காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வனஜா, கடைக்கு சென்று கணவருக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். மதிய உணவு இடைவேளையின்போது ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

15 சவரன் நகை கொள்ளை

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்து, திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இட்லி மாவு வாங்குவது போல் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வனஜாவை கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர், வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் அச்சம்

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவேற்காடு பகுதியில் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com