

சென்னை,
இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டக சாலை(இம்ப்காப்ஸ்)யின் செயலாளர் டாக்டர் பொன்சிங், துணைத்தலைவர் டாக்டர் சுரேஷ், இயக்குனர் டாக்டர் பானுபிரகாஷ், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கரு.கார்த்திகேன் ஆகியோர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை நிலவேம்பு குடிநீரும், பன்றி காய்ச்சலை கபசுரக் குடிநீரும் கட்டுப்படுத்தும். நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பை மட்டும் காய்ச்சி குடிப்பதனால் பலன் அளிக்காது. நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 மூலிகைகள் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்ட பொடியை காய்ச்சி குடிப்பதன் மூலம் மட்டுமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்.
மாநில மருந்துகள் உரிமை வழங்கும் அதிகாரிகளிடம் (இந்திய மருத்துவம்) உரிமம் பெற்ற நிறுவனங்களின் பொடிகளை வாங்கி குடிநீர் காய்ச்சி குடிப்பதன் மூலமே முழுமையான பயன் அடைய முடியும். சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் தயாரிக்க ஆசிய அளவில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட பன்மாநில கூட்டுறவு நிறுவனமான எங்கள் இம்ப்காப்ஸ் பொடிகள் மிகுந்த பயன் அளிக்கும். தற்போது எங்கள் நிறுவனம் 75-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்து பவள விழா ஆண்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 2 தேக்கரண்டி நிலவேம்பு குடிநீர் பொடியை 400 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து 150 மி.லி. அளவுக்கு சுண்ட காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவும், 5 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 5 மி.லி.யும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 40 மி.லி.யும் வழங்க வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க வேண்டும்.
இதே போன்று பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மேற்கண்ட முறையில் கபசுரக் பொடியில் குடிநீர் தயார் செய்து மேற்சொன்ன அளவிலேயே தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க வேண்டும். இந்த கபசுரக் குடிநீர் பொடியில், சுக்கு, திப்பிலி, லவங்கம், பூனை காஞ்சொரி, அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய் தோல், ஆடா தோடை சமூலம், தும்பை வேர், கோஷ்டம், சீந்தில், கண்டு பரங்கி, நிலவேம்பு, பாடா மலபார், கோரைக் கிழங்கு ஆகிய மூலிகைகள் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்டு உள்ளன.
இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் டாக்டர் ஆர்.கண்ணன் அறிவுரைப்படி, திருவான்மியூர், எல்.பி.சாலையில் உள்ள இம்ப்காப்ஸ் நிறுவன நுழைவுவாயிலில் நாளை(புதன்கிழமை) முதல் 3 நாட்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரை நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. நாங்கள் போலீசார் உதவியுடன் பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கும் முகாமை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.