

திருவாரூர்,
தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
கஜா புயல் பாதிப்பிற்கு ஆளான மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், இங்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி அறிக்கை அளிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கூறும்பொழுது, இடைத்தேர்தல் நடத்தவதற்கு முன் அனைத்து கட்சிகள், திருவாரூர் விவசாய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். கருத்துகளை கேட்ட பிறகே, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வை சேர்ந்த வைகை செல்வன், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பால் அச்சத்திலும் பதற்றத்திலும் தி.மு.க. இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தோல்வி பயத்தால் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்து வருகிறார் என்று கூறியுள்ளார்.
டி.டி.வி. தினகரன் கூறும்பொழுது, அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற தோல்வி பயத்தில் முரணான தகவலை மு.க. ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என கூறியுள்ளார்.
இதேபோன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் கூறும்பொழுது, திருவாரூரில் தற்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறும்பொழுது, ஒருதொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. புயல் பாதிப்புக்குள்ளான திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைப்பது நல்லது என கூறியுள்ளார்.
இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் தெடர்பாக, இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் இடைத்தேர்தல் பற்றி தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தகவல் தெரிவித்துள்ளது.