திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்-விவசாயிகள்

திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர்.
திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்-விவசாயிகள்
Published on

திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

நிவாரணம்

காவிரி நீர் பிரச்சினையால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சம்பா நெல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்க தொகை வழங்க வேண்டும்.

நெல் ஈரப்பதம்

மும்முனை மின்சாரம் கூடுதலான நேரம் வழங்க வேண்டும். காளாஞ்சேரி ஆதிதிராவிடர் மயான சாலையை சீரமைக்க வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் நெல்லின் ஈரப்பத அளவை 21 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.

வயல் வழி சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அமைத்து தர வேண்டும். பவர் டில்லர் அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதையடுத்து கலெக்டர் பேசுகையில், 'விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மாவட்ட நிர்வாகம் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகளை துறை அதிகாரிகள் மூலம் துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com