திருவொற்றியூர்: நிர்வாண நடனத்தை கண்டித்த தொழிலாளி கொலை

பலத்த காயமடைந்த ஆகாஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவொற்றியூர்: நிர்வாண நடனத்தை கண்டித்த தொழிலாளி கொலை
Published on

சென்னை,

திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (35). கூலித்தொழிலாளியான இவர், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கடற்கரையில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மல்லிகாபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர் வந்துள்ளார். அப்போது அந்த இளைஞருக்கும் சீனிவாசனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆகாஷ் திடீரெனத் தனது ஆடைகளை அவிழ்த்துக் கீழே போட்டுவிட்டு, நிர்வாணமாக நின்றபடி வெறுப்பேற்றும் வகையில் நடனம் ஆடினார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகாஷைத் தாக்கி அங்கிருந்து விரட்டினர். இதன்பின்னர் சீனிவாசனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், இரவு 11 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே வந்த சீனிவாசன், அதே பகுதியில் உள்ள கடற்கரை அருகே ஒரு கோயில் வாசலில் தூங்கினார். அப்போது அங்கு வந்த ஆகாஷ், சீனிவாசன் தூங்குவதைக் கண்டு ஆத்திரமடைந்தார்.

கொலைவெறியில் இருந்த ஆகாஷ், அருகில் இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து சீனிவாசனின் தலையில் போட்டார். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆகாஷை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவரை திருவொற்றியூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சீனிவாசனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆகாஷும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com