

கோவை,
நீதிபதி ஒருவர் நீதிமன்றத்திற்கு சைக்கிளில் வந்து செல்கிறார்.
கோவை மாவட்ட 5-வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றுபவர், பி.கே.சிவகுமார் (வயது 53). நாமக்கல்லை சொந்த ஊராக கொண்ட இவர், சேலம், கோவை, மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளார்.
எளிமையும், நேர்மையும் கொண்ட பி.கே.சிவகுமார், கீழ் கோர்ட்டுகளில் நீதிபதியாக இருந்தபோதே, நீதிமன்றங்களுக்கு சைக்கிளில் வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த பிறகும் பி.கே.சிவகுமார் தனது நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.
தினந்தோறும் வீட்டில் இருந்து சைக்கிளிலேயே நீதிமன்றத்திற்கு வரும் அவர், கையோடு மதிய உணவையும் எடுத்து வருகிறார். அவ்வாறு எடுத்து வரும் மதிய உணவையும் நீதிபதிகளுக்கான அறையில் சென்று சாப்பிடாமல், நீதிமன்ற ஊழியர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார்.
அதேபோல், நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பி.கே.சிவகுமார் நடந்து செல்லும்போது, உடன் டவாலி வருவதையும் தவிர்க்கிறார். தனியாகவே நடந்து செல்கிறார். இப்படி, நீதிமன்றத்திற்கு சைக்கிளில் வந்து செல்லும் நீதிபதி பி.கே.சிவகுமார் பற்றி கேள்விப்பட்டவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.