கூடிக் கலையும் கூட்டமல்ல இது திமுகவின் கொள்கைக் கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் பதிவு

திமுக முப்பெரும் விழா தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.
திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டி பை-பாஸ் சாலை பகுதியில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விழாவில் பெரியார், அண்ணா விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். முப்பெரும் விழா தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இருந்த போதிலும் தொண்டர்கள், தங்களது இருக்கையில் இருந்து எழவில்லை. மழையில் நனைந்தபடியே விழாவை கண்டு ரசித்தனர்.
சிலர் முன்னெச்சரிக்கையாக குடையுடன் வந்திருந்தனர். அவர்கள் குடையை பிடித்தபடியே விழா முடியும் வரை இருக்கையில் அமர்ந்திருந்தனர். இன்னும் சிலர் மழையால் நனையாமல் இருக்க தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி பிடித்தபடி நின்று மு.க.ஸ்டாலினின் உரையை முழுவதுமாக கேட்டனர்.
இந்த நிலையில் கொட்டும் மழையிலும், திமுக முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
கூடிக் கலையும் கூட்டமல்ல, இது திமுகழகத்தின் கொள்கைக் கூட்டம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கொட்டும் மழையிலும், கழகத்தின் முப்பெரும் விழா கரூரில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது! ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என்று விண்ணதிர ஒலித்த கழக உடன்பிறப்புகளின் கொள்கை முழக்கம் 2026-தேர்தல் வெற்றிக்குத் தொடக்கமாக விளங்கட்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






