

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் த.வெ.க. மாநில தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டை யன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்படுகிறார். இதன் காரணமாகவே அண்ணாமலை தேர்தலில் போட்டியிட பாஜகவில் சீட் தரவில்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் 11 சதவீத வாக்கு வங்கி இருந்தது. அது தற்போது 5 சதவீதமாக குறைந்துவிட்டது.
அனைத்துக் கட்சி தலைவர்களையும் தரக்குறைவாக பேசிவரும் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் தற்போது வந்துவிட்டது. பணம் கட்டிய யாருக்கும் சீட்டு தராமல் திருப்பதிக்கு போய் நாமத்தை கையில் கொடுத்து விட்டார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் என்னை தெருவில் நிறுத்துவதாக கூறினார். தற்போது அவருக்கு சீட்டு மறுக்கப்பட்டு அவர்தான் நடுத்தெருவில் நிற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.