“இது உங்கள் கடின உழைப்பின் வெற்றி” – 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105 (94.31 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
“இது உங்கள் கடின உழைப்பின் வெற்றி” – 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு
Published on

சென்னை,

2025-26ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105 (94.31 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.47 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பத்தாம் வகுப்பு (10th Standard) பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்கள் கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த தகுதியான வெற்றி இது. தேர்வில் தேர்ச்சியடையாத மாணவச் செல்வங்கள் முயற்சி செய்து, படித்து வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

மேல்நிலைக்கல்வி (11th Standard) அல்லது பட்டயப்படிப்பு (Diploma) என உங்கள் எதிர்காலக் கனவை நோக்கிய அடுத்த முக்கியப் படியை எடுத்து வைக்க இதுவே சரியான நேரம். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற பாடப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

உங்கள் வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த உங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் குறைந்திருந்தாலோ அல்லது ஏதேனும் பாடத்தில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ கவலைப்பட வேண்டாம். இது ஒரு ஆரம்பம் தான். இன்னும் சாதிக்க பல வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன!

உங்களின் எதிர்காலக் கல்விப் பயணம் சிறக்கவும், நீங்கள் நினைத்த இலக்குகளை அடையவும் வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com