செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது இதற்காகத்தான்... முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது இதற்காகத்தான்... முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
Published on

மதுரை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர போகிறேன் என்றார். அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியும் இன்று விளக்கம் அளித்து உள்ளார்.

இந்நிலையில், மதுரையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடையே பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை விட முன்னால் பிறந்ததால் செங்கோட்டையன் மூத்த நிர்வாகியாகி விடுவாரா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர், செங்கோட்டையன் முன்னால் பிறந்தார். இதனை தவிர எல்லா தகுதிகளும் பழனிசாமிக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என கூறினார்.

நானும், ராஜன் செல்லப்பாவும் கூட மூத்த நிர்வாகிகள்தான் என்று கூறிய அவர், ஜெயலலிதா இருக்கும்போதே செங்கோட்டையன் முதல்-அமைச்சராக விரும்பியவர். அதனால், செங்கோட்டையன் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, தி.மு.க. வெற்றி பெறும் என கூறிய ஓ. பன்னீர் செல்வத்துடன் சேர்ந்ததால் தான் அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டோர் பி டீம் ஆக செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். இன்னும் 3 மாத காலத்தில் அவர்களின் முடிவு என்ன ஆகிறது என பாருங்கள் என்றும் கூறினார்.

செங்கோட்டையன், ஏ1 என கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், கோடநாடு வழக்கில் ஆதாரம் இருந்தால் பழனிசாமியை பிடித்து உள்ளே போடுங்கள் என்று கூறினார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நடக்கிறது. போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கட்டும். பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது இந்த தி.மு.க. அரசு. அதனால், பணம் கொடுப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com