எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியை தடுக்க பா.ஜனதா சதி-திருச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியை தடுக்க பா.ஜனதா கட்சி சதி செய்கிறது என்று திருச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியை தடுக்க பா.ஜனதா சதி-திருச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி
Published on

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியை தடுக்க பா.ஜனதா கட்சி சதி செய்கிறது என்று திருச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

பா.ஜனதா சதி திட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா எதிர்ப்பு அரசியல் கட்சி தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பதற்கும், எதிர்க்கட்சிகள் சிதறி போகாமல் ஒருங்கிணைக்கப்படுவதற்கும் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் விதமாக பா.ஜனதா அரசு தொடர்ந்து பல்வேறு சதித்திட்டங்களை வகுத்து வருகிறது.

அதன் விளைவாக தான் அமலாக்கத்துறையை ஏவிவிட்டு செந்தில்பாலாஜியை 18 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி கைது செய்துள்ளனர். இப்படிப்பட்ட எல்லா அடக்குமுறைகளையும் தாண்டி தமிழக முதல்-அமைச்சர் தற்போது இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் செயல்படுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்.

மணிப்பூர் விவகாரம்

மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு இடையே இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி தற்போது பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்றொரு இடத்துக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். யோகா செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.

நாட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமரின் அணுகுமுறை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இது பற்றி கேட்டபோது, அவருடைய குடும்பத்தாரையும் கைது செய்து சித்ரவதை செய்துள்ளனர்.தமிழக அரசு இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். மேலும், இந்த சம்பவத்தில் சித்தூர் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து வருகிற 26-ந் தேதி ஆந்திர மாநிலம் சித்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. வுடன் கூட்டணியில் உள்ள பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு, பா.ஜனதா விலகியபிறகு பார்ப்போம் என்று அவர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com