

சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் புத்தகத்தை வெளியிட, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, நக்கீரன் கோபால், விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக வன்னியரசு வரவேற்றார். முடிவில் முகமது யூசுப் நன்றி கூறினார்.
விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
நீண்டகாலம் இயங்காது
இந்த நூல் ஒரு கட்சிக்காக எழுதப்படவில்லை. அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடிய நூல். மக்களை அமைப்பாக்குகிற பணியில் ஈடுபடுவோருக்கு இது ஒரு வழிகாட்டும் நூலாக அமையும்.
அரசும், மதமும் ஒரு அமைப்பாக இருப்பதால் தான் அவை அதிகார வலிமை கொண்டவையாக உள்ளன. அதுபோல மக்களும் அதிகார வலிமை பெற வேண்டுமென்றால் அமைப்பாக அணிதிரள வேண்டும். குறிப்பாக அரசியல் அமைப்பாக, அரசியல் சக்தியாக திரண்டு எழ வேண்டும். அதற்கு கொள்கை-கோட்பாடுகள் மிக முக்கியமானவை. இவை இல்லையென்றால் எந்த அமைப்பும் நீண்டகாலத்துக்கு இயங்க முடியாது.
களத்தில் பணியாற்றக் கூடியவர்கள் ஒரு போதும் தங்களை முன்னிறுத்துவதில் குறியாக இருக்கக்கூடாது. அமைப்பையும், கொள்கை-கோட்பாடுகளையும் முன்னிறுத்த வேண்டும். இவ்வாறு செயல்படவில்லை என்றால் நாம் தலைவர்களாக வளர முடியாது. அமைப்பை அதிகாரத்தை வென்றெடுக்க நாம் இந்த நிகழ்வில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.