அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் - திருமாவளவன்

அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க வேண்டும் - திருமாவளவன்
Published on

பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம்

சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று மதியம் விமானத்தில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளார். அவர் தனது பிறந்தநாள் விழாவில், வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரப்புரையை, தொடக்கவுரையாக பேசியுள்ளார். அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ள அணிகளை இணைக்கும் பணியில் முதல்-அமைச்சர் ஈடுபட வேண்டும். சுற்றுப்பயணமாக நாடு முழுவதும் சென்று மாநில அரசியல் தலைவர்களை சந்திக்க வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை இல்லை

அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறியுள்ளனர். அதற்கான முன்னெடுப்பை தி.மு.க. எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். பா.ஜ.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திடீரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகுத்து விட்டார். காங்கிரசுடன் இணைந்து பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பது, ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கப்பட்ட கோரிக்கைதான்.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு கார்ப்பரேட்டுக்கானது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில்தான் பிரதமர் மோடிக்கு அக்கறை இருக்கிறது. மக்களின் நலன் மீது இல்லை. மத்திய அரசு சமையல் கியாஸ் விலை உயர்வு அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com