தூத்துக்குடி: 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி- தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு


தூத்துக்குடி: 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி- தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
x

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடனான மாதாந்திர மாவட்ட கல்விசார் மீளாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (28.5.2025) பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடனான மாதாந்திர மாவட்ட கல்விசார் மீளாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழர்தம் வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்வியல் மதிப்புகளை நன்குணர்ந்து எதிர்கால சமுதாயம் ஏற்றமுறும் வகையில் இன்றைய மாணவர் தலைமுறை அறிவாற்றலைப் பெறவும். வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதற்கான கற்றல் அனுபவங்களைப் பெற்றிடும் வகையிலும் தரமான கல்வி பெறுவதை உறுதிப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. சமூக, பொருளாதார, பாலின வேறுபாடுகளின்றி சமத்துவமான கல்வியைப் பெறும் சமுதாயமே உலகில் உன்னதம் எய்த முடியும் என்பதை நன்குணர்ந்த தமிழ்நாடு அரசு அதனை அடையும் நோக்கில் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது அதற்கு பலன் சேர்க்கும் விதமாக ஆசிரியர்களாகிய நீங்கள் என்றென்றும் உறுதுணையாக இருந்து அறிவாற்றல் மிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் உயர்கல்விக்கும் உரிய வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி என்பது பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் மற்றும் சரியாக தேர்வு எழுதாத மாணவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவது மட்டும் ஆசிரியருக்கான பணி அல்ல. நம் மாணவர்களின் எதிர்காலங்களை எந்தெந்த வழிகளை பயன்படுத்தி உதாரணமாக பள்ளி மேலாண்மைக் குழு, முன்னாள் மாணவர்கள், ஊர்களில் உள்ள பெரும் தலைவர்கள் மற்றும் இணக்கமான நண்பர்கள் இவர்கள் துணைக்கொண்டு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, உரிய பயிற்சிகளை வழங்கி மாணவர்களை சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய செய்வதே ஆசிரியரின் தலையாய கடமையாகும்.

எந்த ஒரு ஆசிரியரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் அத்துடன் என் பணி நிறைவடைந்தது என்று எண்ணத்தில் இருக்காமல் மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளமாக விளங்க வேண்டும். மேலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை அந்த ஊரில் உள்ள பெரியோர்கள் மூலமாக வரவழைத்து தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து அவர்கள் இடைநிற்றலின்றி கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டும்மல்லாமல், சில இடங்களில் பெற்றோர்களின் அறியாமையால் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற அவர்களின் பிள்ளைகளை உயர்கல்விக்கு அனுப்பி வைக்காமல் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரிய புரிதலை ஏற்படுத்தி, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் உயர்கல்வி சேர்வதை உறுதிசெய்யும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-2025-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 33 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story