

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கான பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, தூத்துக்குடி ரூரல் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னத்துரை, அருணாச்சலம் மற்றும் தலைமை காவலர்கள் ஆனந்தகுமார், மாயாண்டி ஆகியோர் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி அதிவேகமாக வந்த மாருதி ஆம்னி வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். சோதனையில், வேனில் மூடை மூடையாக ரேஷன் அரிசி மறைத்து வைத்து சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், 50 கிலோ எடையுள்ள 22 மூடைகளில் மொத்தம் 1,100 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த குருநாதன் மகன் லட்சுமணன் (31) என்பவரை கைது செய்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், ரேஷன் அரிசி யாரிடமிருந்து வாங்கப்பட்டது, யாருக்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.