

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நவம்பர் மாதத்தில் மட்டும் 1,505 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், 545 நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் தெருநாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், மாநகராட்சி சார்பில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நடப்பு நவம்பர் மாதத்தில் மட்டும் 1,505 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக 545 நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 649 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு, 97 நாய்களுக்குப் பிறப்புத் தடுப்பு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுநலன் கருதி இப்பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக நடைபெற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.