தூத்துக்குடி: குடும்ப தகராறில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் குடும்ப தகராறில் ஏற்பட்ட மனவேதனை காரணமாக 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் குடும்ப தகராறில் ஏற்பட்ட மனவேதனை காரணமாக 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த வேலு மகன் சந்தானம் (வயது 60). தச்சுத் தொழிலாளியான இவருக்கு ஜெயலட்சுமி(40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சந்தானம் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக்கொண்ட ஜெயலட்சுமி, குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

இதில் மனவேதனை அடைந்த சந்தானம், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தரண்யா, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை காமராஜர் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ்(34). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது அக்கா மற்றும் தம்பியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கா, தம்பி இருவரும் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தினர் பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த ராஜேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com