

தூத்துக்குடி,
தூத்துக்குடி தட்டப்பாறை காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,500 அபராதம் விதித்து தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தூத்துக்குடி தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலதட்டப்பாறையில் இருந்து கீழதட்டப்பாறை செல்லும் வழியில் உள்ள ஒரு குவாரி அருகில், கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சமுத்திரம் (வயது 40) என்பவரை முன்விரோதம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர், அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த மந்திரசூடாமணி மகன் ஆறுமுகம்(36) மற்றும் திருநெல்வேலி மாவட்டம், பவுல்கணபதியாபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் துரைபாண்டி(32) ஆகிய 2 பேரையும் தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (CJM) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி நேற்று (23.9.2026) ஆறுமுகம் மற்றும் துரைப்பாண்டி ஆகிய 2 பேரையும் குற்றவாளி என உறுதி செய்து அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.