தூத்துக்குடி: கடைகளில் 240 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.13 ஆயிரம் அபராதம்

பொதுமக்களும், வணிகர்களும் ஒருமுறை பயன்படுத்தப்படும் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி கிழக்கு மண்டலப் பகுதி கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 240 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் சோதனை

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனரின் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

240 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குறிப்பாக வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அதிகம் நிறைந்த மட்டக்கடை, டபிள்யூ.ஜி.சி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, விதிகளை மீறி பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த 240 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.13 ஆயிரம் அபராதம்

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்திய வணிகர்களுக்கு மொத்தம் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது. பொதுமக்களும், வணிகர்களும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com