தூத்துக்குடி: இளம்பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் கைது

நாலாட்டின்புதூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான சண்முகராஜ் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் இடையே ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவர் பதவி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் வானரமுட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டி மகன் சண்முகராஜ் (வயது 35) ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இவர் கடந்த 9.4.2023 அன்று இரவு ஜமீன் தேவர்குளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி வெள்ளத்துரைச்சி(28) என்பரை தனது ஆட்டோவில் சவாரியாக ஏற்றிக் கொண்டு நாலாட்டின்புதூர் நாச்சியார்பட்டியில் இருந்து காளாம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து சண்முகராஜை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, வெள்ளைத்துரைச்சியை கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இவ்வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் கிடைக்காமலும் குற்றவாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு விசாரணைகள் நடந்தும் இவ்வழக்கு கடந்த 2 ஆண்டுளுக்கு மேலாக தீர்வின்றி இருந்து வந்தது.
இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஏட்டுகள் கழுகாசலமூர்த்தி, ரமேஷ், கார்த்திக்ராஜா, விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சரவணகுமார், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சண்முகராஜ் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் விசாரணை செய்து அவர்கள் கூறிய தகவல்கள் ஆகியவற்றை மீண்டும் ஆராயப்பட்டது.
இதனையடுத்து மேற்சொன்ன போலீசார் புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து தீவிர விசாரணை செய்தனர். அதில் வானரம்படி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் கணேசன்(29), அவரது சகோதரர் ராஜா(32) மற்றும் அவரது உறவினர்களான கயத்தாறு வடக்கு கோனார்கோட்டையை சேர்ந்த வேல்பாண்டி மகன் சங்கிலிபாண்டி(28), கோவில்பட்டி இந்திராநகரைச் சேர்ந்த வெள்ளைசாமி மகன் சங்கிலிபாண்டி ஆகியோருக்கு மேற்சொன்ன கொலை வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை இன்று (7.6.2025) மேற்சொன்ன போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் மேற்சொன்ன ஆட்டோ ஓட்டுநரான சண்முகராஜ் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் இடையே ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவர் பதவி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததும், அந்த முன் விரோதத்தினால் மேற்சொன்ன 4 பேரும் சேர்ந்து சம்பவ இடத்தில் வைத்து சண்முகராஜை கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டபோது அவர் மயக்கமடைந்ததால், அவருடன் சவாரியில் இருந்த வெள்ளைதுரைச்சி தடுக்க சென்றபோது அவரையும் கம்பு மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப ரீதியாகவும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து, கைது செய்த தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.






