தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

கடந்த 2023ம் ஆண்டு தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் முருகன் (வயது 45) என்பவரை முன்விரோதம் காரணமாக மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான இசக்கிமுத்து மகன் கருப்பசாமி(எ) கருப்பன்(29), சுப்பையா மகன் ராஜசேகர்(எ) ராஜா(35), மற்றொரு இசக்கிமுத்து மகன் கணேசன்(42), கணேசனின் மகன் முத்துசெல்வம் (23) ஆகியோர் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்சொன்ன 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று கருப்பசாமி(எ) கருப்பன், ராஜசேகர்(எ) ராஜா, கணேசன் மற்றும் கணேசனின் மகன் முத்துசெல்வம் ஆகிய 4 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சிலம்பரசன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com