

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் தங்க நகை மற்றும் பணம் திருடிய நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5½ சவரன் தங்க நகை மற்றும் ரூ.2.10 லட்சம் ரொக்கப் பணத்தை மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் விஜய முத்துப்பாண்டி என்பவரது மனைவி சிவகாமி (வயது 64) என்பவர், கடந்த 17.9.2026 அன்று தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போனதாக கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், சிவகாமி என்பவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது கயத்தாறு வடக்கு தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சிவகுமார்(28) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் மேற்சொன்ன சிவகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 5½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மீட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.