

தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி அங்கிருந்து தப்பி ஓடினார்.
தூத்துக்குடி குருசடிசந்து பகுதி த.வெ.க. பிரமுகர் ராகுல் என்பவரின் காரை சேதப்படுத்தியதாக, தூத்துக்குடி மீ.கா. தெருவை சேர்ந்த முகமது தவுபீக் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
பரிசோதனைக்கு பிறகு அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் முகமது தவுபீக் அமர்ந்திருந்தார். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் முகமது தவுபீக் நைசாக போலீஸ் பிடியில் இருந்து நழுவி தப்பி ஓடிவிட்டார்.
சிறிதுநேரம் கழித்து கைதியை காணாத போலீசார், மாவட்டம் முழுவதும் உஷார்செய்தனர். தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் அவரை தூத்துக்குடியில் வைத்து மீண்டும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.