தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களிடம் இருந்து அதிக அளவில் லஞ்சப் புகார்கள் வருவதாக தொடர்ந்து எழுந்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று தூத்துக்குடி கீழூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர்.
ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால் துறை தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தின் அனைத்து நுழைவு வாயில்களையும் பூட்டி, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு கறாரான கட்டுப்பாடுகளை விதித்து போலீசார் இந்த விசாரணையை நடத்தினர். இந்த சோதனையின்போது, ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் கிருபாகரனிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.15 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த தொகை குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று மதியம் 2:45 மணி முதல் இரவு நேரம் வரை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பணத்துடன் அலுவலகத்திற்குள் வந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்து அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட பதிவுத்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாய்ந்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி உள்பட பல்வேறு சார்-பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.