

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களைக் கைது செய்ய சென்ற காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திவிட்டு, குற்றவாளிகள் தப்பியோடியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் ஜோசப் விஜய்யின் தலைமையிலான ஆட்சியில், பொதுமக்களின் பாதுகாப்பு தான் கேள்விக்குறியாகி வருகிறது என்று பார்த்தால், சிங்கப்பெண் சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கு பாலியல் தொல்லை, குற்றவாளிகளை பிடிக்க சென்றவர்களுக்கு அரிவாள் வெட்டு என காவலர்களின் நிலைமை படு மோசமாகிக் கொண்டிருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், தமிழகக் காவலர்களின் பாதுகாப்பிற்கே நாம் பிற மாநிலக் காவல்துறையின் உதவியைத் தான் நாட வேண்டியிருக்கும் போல.
உருட்டுக்கட்டைக்கு பெயர்போன "அக்மார்க்" ரவுடிகளை எல்லாம் தமிழகத்தின் முக்கிய அமைச்சராக அமர்த்தினால், எஞ்சியுள்ள குற்றவாளிகளுக்கு அரசைக் கண்டால் இளக்காரமாகத் தானிருக்கும் என்பதை முதல்-அமைச்சர் விஜய் எப்போது உணர்ந்து தனது கட்சியை தூய்மைப்படுத்துகிறாரோ, அப்பொழுது தான் தமிழகத்தின் அமைதி உறுதி செய்யப்படும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.