சாலை விபத்தில் மூளை சாவு: தூத்துக்குடி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு இவரது உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பேச்சி அம்மன் கோவில் தெருவை சேர்த்தவர் சிவபண்டாரம் (வயது 21). இவர் கடந்த 6ம் தேதி அன்று காலை சுமார் 11.30 மணியளவில் இவர் பைக்கில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி அரக மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி 16ம் தேதி அன்று திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர் மற்றும் மூளையில் கசிவு அதிகமாக இருப்பதை உறவினர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தனர். பின்பு 17/06/2025 அன்று மூளையின் செயல்பாடு இருப்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அந்த பரிசோதனை அறிக்கையில் அவருடைய மூளை செயல்பாடு இல்லை என்பதை தெளிவாக உறவினர்களிடம் எடுத்துரைத்தனர். அதன் பின்பு அவரது உறவினர்கள் தாமாக முன்வந்து அவரது உடலுறுப்புகளான கல்லிரல், இருசிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் உள்ளிட்ட பாகங்களை தானம் செய்ய ஒப்புதல் தெரிவித்தனர்.
சிறுநீரகம் 1- திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிறுநீரகம் 2- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், கல்லீரல்- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், கார்னியாஸ்- திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து வாலிபரின் உடலுக்கு மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் மரியாதை செலுத்தி பின்னர் அடக்கம் செய்தனர்.






