தூத்துக்குடி: பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர், தொழில் தேவைகளுக்காக ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்று கார் வாங்கியுள்ளார்.
தூத்துக்குடியில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடன் தவணையை செலுத்த வலியுறுத்தி பைனான்ஸ் நிறுவனத்தினர் அவமரியாதை செய்ததால் மனமுடைந்த கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ரூ.7.50 லட்சம் கடன் வாங்கிய கார் டிரைவர்

தூத்துக்குடி போல்டன்புரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது 44). இவருடைய மனைவி கவிதா(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கதிரவன் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தனது தொழில் தேவைகளுக்காக கதிரவன் கடந்த 29.11.2024 அன்று தூத்துக்குடி பீச்ரோடு பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்று கார் வாங்கியுள்ளார்.

கடன் தவணைகளைச் செலுத்த இயலவில்லை

அதற்கான மாதத் தவணையை அவர் முறையாகச் செலுத்தி வந்த நிலையில், சமீபத்தில் தொழில் சரிவர நடக்காத காரணத்தால் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத் தவணைகளைச் செலுத்த இயலவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் கதிரவனின் வீட்டிற்கு சென்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

டிரைவரை அவமானப்படுத்திய பைனான்ஸ் நிறுவனத்தினர்

கடந்த அக்டோபர் 15-ம் தேதியன்று பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 5 நபர்கள் கதிரவனின் வீட்டிற்கு நேரில் சென்று, அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதுடன் காரை பறிமுதல் செய்து தூக்கிச் செல்ல முயன்றுள்ளனர்.

விஷம் குடித்து தற்கொலை

பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த அவமானத்தாலும், கடுமையான மனஉளைச்சலாலும் மனமுடைந்த கதிரவன், கடந்த அக்டோபர் 16-ம் தேதி காலை 4.30 மணியளவில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 18-ம் தேதி காலை 10.15 மணியளவில் கதிரவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த கதிரவனின் மனைவி கவிதா அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com