

தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கோபுரம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித நல் ஆலோசனை மாதா ஆலயத்தில் புதிதாகக் கோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாரம் அமைக்கப்பட்டு, இன்று மதியம் 12.30 மணி அளவில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென புதிதாகப் போடப்பட்ட கான்கிரீட் தளம் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கான்கிரீட் இடிந்து விழுந்ததில், மேலே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டு இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்த 4 தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டிடம் சரிந்து விழுந்ததில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால், கான்கிரீட் இடிபாடுகளுக்குள் வேறு ஏதேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என கண்டறிய கான்கிரீட் கலவைகளை அகற்றும் பணியில் ஊழியர்களும் தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.