

தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டார். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் மில்லர்புரம் வரை ஊர்வலமாக சென்றார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மதியம் 1.20 மணியளவில் வந்தார்.
அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் கனிமொழி எம்.பி. வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.பி.சி.வி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்தார். தி.மு.க. மாற்று வேட்பாளராக விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேல்சாமி மனுதாக்கல் செய்தார்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி தொகுதி முன்னேறுவதற்காகவும், தொழில் வளர்ச்சி பெறுவதற்காகவும் வெற்றி பெற்ற பிறகு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். தி.மு.க.வில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவர் நேற்று மனு தாக்கல் செய்ய போவதை அறிந்ததும் காலை முதலே கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் திரண்டனர். மதியம் 12.30 மணியளவில் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடையே ஆதரவு கேட்டு வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
பின்னர் மதியம் 1 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்வதற்காக சென்றார். அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அரசகுமார், மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
அவர் 2 வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளார். அவருக்கு மாற்று வேட்பாளராக பா.ஜனதா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளேன். 20 ஆண்டுகால எனது அரசியல் பணியில் மக்களுக்கு தொண்டாற்ற, மக்கள் பிரதிநிதியாக ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுவேன். மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டுவர பாடுபடுவேன். ஒரு பெண் தலைவரை எதிர்த்து நிற்பதால் சந்தோஷப்படுகிறேன். ஆனால் என் மீது எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. ஜெயிலுக்கு சென்றது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.