விபத்தில் இறந்த என்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியை சேர்ந்த என்ஜினியர் ஒருவர், அருப்புக்கோட்டை பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இழப்பீடு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள நடுக்கூட்டுடன்காடு, நியூ காலனியைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ரவி அண்ணாத்துரை (வயது 54). இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சைட் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 19.4.2022 அன்று இவர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்றில் பயணமாக சென்றுகொண்டிருந்தார். அந்தப் பேருந்து அருப்புக்கோட்டை முத்தரையர்நகர் விலக்கு அருகே சென்றபோது, சாலையோரமாக பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கடுமையான வேகத்துடன் மோதியது.

இழப்பீடு கோரி வழக்கு தாக்கல்:

இந்த விபத்தில் சிக்கிய ரவி அண்ணாத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, ரவி அண்ணாத்துரையின் மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகள்கள் ஆர்த்தி, அதிர்ஷ்டா ஆகியோர் தங்களுக்குரிய நியாயமான இழப்பீடு வேண்டி தூத்துக்குடி வழக்கறிஞர் வி.ரவீந்திரன் மூலமாக தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி மீது ரூ.3 கோடி இழப்பீடு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.1.33 கோடி இழப்பீடு; நீதிபதி உத்தரவு:

இந்த வழக்கை முழுமையாக விசாரித்த முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.தாண்டவன், விபத்தில் உயிரிழந்த என்ஜினியரின் குடும்ப சூழ்நிலை மற்றும் வருவாயை கருத்தில் கொண்டு இறுதி தீர்ப்பளித்தார். அதன்படி சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தின் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையான ஒரு கோடியே 33 லட்சம் ரூபாயை மனு தாக்கல் செய்யப்பட்ட தேதி முதல் 7.5 சதவீதம் வட்டி மற்றும் நீதிமன்ற செலவுத் தொகையுடன் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ரவீந்திரன் ஆஜராகி வாதாடினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com