தூத்துக்குடி: பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேர் படுகாயம்!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் திடீரென பைக்கின் முன் குறுக்கே பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேர் படுகாயம்!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் திடீரென பைக்கின் முன் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாத்தான்குளம் செட்டியார் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் மோகன் (62), நேற்று இரவு தச்சமொழி பகுதியைச் சேர்ந்த பாண்டியின் மகன் ரவிச்சந்திரன் (50) என்பவரை தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக் கொண்டு உடன்குடி - திசையன்விளை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் சென்ற பைக் சாத்தான்குளம் அருகே உள்ள தங்கை கைலாசபுரம் சாலையில் வந்தபோது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட நபர் திடீரென பைக்கின் முன்பாக குறுக்கே பாய்ந்துள்ளார். இதனால் பைக் அவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த மோகன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த ரவிச்சந்திரனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும், பைக் மோதியதில் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் இடது கால் முறிந்தது.

விபத்தைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ரவிச்சந்திரனையும் காயமடைந்த நபரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மோகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com