

தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்துநகர் கணபதிநகரைச் சேர்ந்தவர் வினோத் (வயது 32). மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கடலுக்கு சென்றுவிட்டு, மாலை 7 மணியளவில் அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மொட்டைக்கோபுரம் அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது.
பின்னர் அவர்கள் வினோத்தை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்தார்.
விசாரணையில், மேற்சொன்ன தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திரேஸ்புரத்தைச் சேர்ந்த கென்னடி மகன் பிரசாந்த்(25), சுனாமி காலனியைச் சேர்ந்த மைக்கேல் மகன் ஜேம்ஸ்(25) மற்றும் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் சூசைய்யா(47) என்பது தெரியவந்தது.
இவர்களுக்கும் வினோத்தின் தம்பிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் 3 பேரும் வினோத்தை தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே பிடிபட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.