

தூத்துக்குடி,
புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 6 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், 6 நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் கடலுக்குச் சென்றனர்.
தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் மற்றும் மோசமான வானிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் தொழிலை நிறுத்தி வைத்திருந்தனர்.
இதனால் விசைப்படகுகள் அனைத்தும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி இருந்தனர். இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை மீண்டும் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்கள் தயாராகினர்.
அதன்படி, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 260 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குச் சென்றுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்போது அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.