தூத்துக்குடி: பகுதி நேர வேலை என்று ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரிப்பு- காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் எந்தவொரு செயலிகளிலும் முதலீடு செய்யும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சமீப நாட்களில் வாட்ஸ்அப் மூலமாக பகுதி நேர வேலை என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன.
பகுதி நேர வேலை என்ற பெயரில் Look என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் ரூ.20,300ஐ முன்பணமாக செலுத்த வேண்டும். பின்னர் தினமும் அச்செயலியில் வரும் நாவல் மற்றும் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தினமும் ரூ.700 சம்பாதிக்கலாம் என்று கூறி ஆரம்பத்தில் சிறிய தொகையை லாபமாக வழங்கி நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர். பின்னர் மற்றவர்களை இணைப்பதன் மூலம் இலாபம் பெறலாம், கொடுத்த பணத்தில் பாதி தொகையை ஒரு வாரத்தில் திருப்பி பெற்று கொள்ளலாம் என்ற யுக்திகளை பயன்படுத்தி பொது மக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக இந்த வகை இணையதள முதலீட்டு மோசடிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்தைகள் கூறி, போலியான இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைத்து மோசடி செய்கின்றன.
ஆகையால், பொதுமக்கள் எந்தவொரு செயலிகளிலும் முதலீடு செய்யும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். தெரியாத சமூக ஊடக அணுகல்களையும், சரிபார்க்கப்படாத இணையதளங்களையும் நம்பி முதலீடு செய்ய வேண்டாம். இத்தகைய சந்தேகமான பதிவுகள் வந்தாலோ உங்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் லாபம் கிடைப்பதாக கூறி சேரச் சொன்னாலோ கவனமாக இருக்க வேண்டும். மேலும் இது போன்ற மோசடிகளில் ஏமாற்றப்பட்டிருந்தால், உடனடியாக இலவச சைபர் குற்ற தொலைபேசி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






