தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிஸ்மிதா தீர்ப்பு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, குலையன்கரிசல் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த கணேஷ் மகன் வெற்றிவேல் (வயது 35) என்பவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கில், குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர்களான பூலோகபாண்டி மகன் ராஜேஷ்கண்ணன் (வயது 38) மற்றும் பாலகிருஷ்ணன் மகன் ஜோதிவேல் (வயது 45) ஆகியோரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிஸ்மிதா நேற்று (08.04.2025) தீர்ப்பு வழங்கினார். அதில் மேற்சொன்ன குற்றவாளிகளில் ராஜேஷ்கண்ணன் கடந்த 2018-ம் ஆண்டு இறந்த நிலையில் மற்றொரு குற்றவாளியான ஜோதிவேல் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதாராணி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் மாலாதேவி, விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் விஜயா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.