

தூத்துக்குடி,
தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்ற ஒருவரை கத்தியால் தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சங்கரப்பேரி கே.வி.கே.சாமி நகரைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 57) என்பவர் கடந்த 23.9.2026 அன்று காலை 9 மணியளவில் உழவர் சந்தை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, மேலூர் ரெயில் நிலையப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே வந்த இரண்டு நபர்கள், கருப்பசாமியை வழிமறித்து தாக்கி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டனர். மேலும் தடுத்த அவரை கத்தியால் தலையில் குத்தியதில் கருப்பசாமிக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி ரெயில்வே காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய திருநெல்வேலி இருப்புப்பாதை வட்ட இன்ஸ்பெக்டர் செல்வி, தூத்துக்குடி இரண்டாவது கேட் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ராமலக்ஷ்மணன் என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போன் மற்றும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராமலக்ஷ்மணனை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான தேவராஜனை தூத்துக்குடி வடபாகம் போலீசார் வேறு ஒரு வழக்கில் கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.