

தூத்துக்குடி,
நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 48). இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்குவது வழக்கம். ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் புல்லாவெளியை சேர்ந்த தொழிலாளியான சரவணன்(38) என்பவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து, சேவியர் தூங்கும் இடத்தின் அருகில் படுத்து தூங்குவார்.
நேற்று முன்தினம் இரவு 2 பேரும் தனித்தனியாக கூலி வேலைக்கு சென்றனர். இரவில் சரவணன் வழக்கமாக படுக்கும் இடத்தில் சேவியர் தூங்கிவிட்டார். அவரை சரவணன் எழுப்பி வேறு இடத்தில் தூங்குமாறு கூறி உள்ளார். ஆனால் சேவியர் இடத்தை விட்டுக் கொடுக்க மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், அந்த பகுதியில் கிடந்த உருட்டுக் கட்டையால் சேவியரை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதுகுறித்து உடனடியாக மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகன்அய்யர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சேவியரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சேவியர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் மீது ஏற்கனவே பிளாட்பாரத்தில் தூங்கியவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.