தூத்துக்குடி: 300 கிராம் தங்கக்கட்டியுடன் ரெயிலில் தப்பிய மராட்டிய வாலிபர் கைது

தங்கக்கட்டி மற்றும் ரூ.43 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சேலம்,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் விகாஷ் ஷிண்டே. இவர், தூத்துக்குடி டபிள்யூ ஜி.சி.ரோட்டில் நகை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்த மாற்றுத்திறனாளியான மராட்டிய மாநிலம் எலவிக்கவ்மேடா பகுதியை சேர்ந்த விட்டல் சிங்கடே (வயது 28) என்பவர் நேற்றுமுன்தினம் 298 கிராம் 400 மில்லி அளவிலான தங்கக்கட்டி, ரூ.43 ஆயிரத்தை திருடிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி தூத்துக்குடி மத்திய போலீசில் விகாஷ் ஷிண்டே புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விட்டல் சிங்கடே, நெல்லை- தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பி சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நெல்லை- தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததும் அந்த ரெயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு படுத்திருந்த விட்டல் சிங்கடேவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்த தங்கக்கட்டி மற்றும் ரூ.43 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் விட்டல் சிங்கடே சொந்த கிராமத்தில் பலரிடம் கடன் வாங்கி வீடுகட்டி வருவதாகவும், இதனால் அந்த கடனை அடைக்க நகை உருக்கும் கடையில் இருந்து 300 கிராம் தங்கக்கட்டி மற்றும் பணத்தை திருடி கொண்டு மும்பை ரெயிலில் தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்தது.






