

தூத்துக்குடி,
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் - I தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் வைத்து கடந்த 2017-ம் ஆண்டு, தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் அந்தோணிராஜ் (வயது 43) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி 3 சென்ட், அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மதன்குமார்(எ) குட்டிஜேசு(39) என்பவரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் - I (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம், நேற்று (11.9.2026) மேற்சொன்ன நபரான மதன்குமார்(எ) குட்டி ஜேசு என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.