

தூத்துக்குடி,
தூத்துக்குடி கணேஷ்நகரைச் சேர்ந்தவர் ஹரி பாலகிருஷ்ணன் (வயது 50). இவர் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் மாட்டு இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தார்
தூத்துக்குடி கணேஷ்நகர் பகுதியில் சென்றபோது, அங்கு 3 மர்மநபர்கள் அவரை வழிமறித்து முகவரி கேட்பது போன்று பேச்சுக்கொடுத்தனர். அவர்களிடம் ஹரிபாலகிருஷ்ணன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென 2 பேர் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டினர்.
இதனால் அலறியடித்தபடி அவர் மோட்டார் சைக்களை கீழேபோட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் மர்மநபர்கள் விரட்டி சென்று அவரை சரமாரியாக வெட்டி, கையில் அணிந்து இருந்த 6 கிராம் தங்க
மோதிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்களை குறிவைத்து சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிகின்றனர். அவர்கள் வேலைக்கு செல்பவர்களை வழிமறித்து பணம், செல்போன் உள்ளிட்டவற்றை அடிக்கடி பறித்து செல் கின்றனர். பணம் கிடைக்கவில்லையென்றால், அவர்களை தாக்கி விட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.