

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு முதலுதவிப் பெட்டி வழங்கி போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில், சாத்தான்குளம் பேருந்து நிறுத்தம் அருகே பணியில் இருந்த போலீசார், படிக்கட்டில் தொங்கியபடி வந்த பேருந்தை நிறுத்தினர்.
தொடர்ந்து, படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களைக் கீழே இறக்கி, அவர்களுக்கு பரிசாக முதலுதவிப் பெட்டிகளை வழங்கினர். படிக்கட்டுப் பயணத்தால் விபத்து ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக இதனை வைத்துக்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியது மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
போலீசாரின் இந்த நூதன நடவடிக்கையால் தங்களின் தவறை உணர்ந்த மாணவர்கள், "நாங்கள் இனிமேல் பேருந்து படிக்கட்டில் தொங்கிச் செல்ல மாட்டோம்; எனவே எங்களுக்கு இந்த முதலுதவிப் பெட்டி இனி தேவைப்படாது சார்" என்று உறுதிமொழி கூறி அந்த பெட்டிகளை போலீசாரிடமே திருப்பி ஒப்படைத்தனர்.
தண்டனை வழங்காமல், மாணவர்களின் மனதை மாற்றும் வகையில் முதலுதவிப் பெட்டி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசாரின் செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.