

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
இந்த ஆணைய அதிகாரி மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். அதன்படி ஏற்கனவே 27 கட்ட விசாரணை நடத்தப்பட்டது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 719 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக ஒரு நபர் ஆணைய விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி 28-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) நடக்கிறது.
இதில் போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் 102 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.