தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தில் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகவில்லை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் ஆஜராகவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் ஆஜராகவில்லை. காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தக்கோரி அவரது வக்கீல் ஒருநபர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

அதன்படி 24-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்த் உள்பட டாக்டர்கள், தீயணைப்பு படையினர் 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நேற்று ரஜினிகாந்த் ஆஜராகவில்லை. அவரது சார்பாக வக்கீல் இளம்பாரதி ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார். அவர் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதன்பிறகு வக்கீல் இளம்பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினிகாந்த் சார்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளேன். அந்த மனுவில் காணொலி காட்சி மூலம் கேள்விகளை கேட்டால் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். கடந்த முறை ஆஜரானபோது, ஆணையத்தில் இருந்து கேள்விகள் தந்தார்கள். அதற்கு கடந்த மார்ச் மாதம் பதில் அளித்து விட்டோம். அதேபோன்று கேள்விகளை தந்தால், அதற்கும் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு விசாரணை அதிகாரி, காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் வசதி இங்கு இல்லை. 2 அல்லது 3 மாதம் அவகாசம் அளிக்கிறோம். சென்னையில் வைத்து வேண்டுமானாலும் விசாரணை நடத்துகிறோம் என்று தெரிவித்து உள்ளார் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com