

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரெயில்வேகேட் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சண்முகத்தாய்(எ) சுமித்ரா (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு ஆண்டாக கணவரைப் பிரிந்து சுமித்ரா தனியாக வசித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சுமித்ரா சில நபர்களுடன் தகாத உறவில் இருப்பதாக அவரது தம்பியான புளியங்குளம், இந்திராகாலனி வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்துராஜாவுக்கு(27) தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் தனது அக்காவைக் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குடும்பத்திற்குப் பெரும் அவமானம் ஏற்படுவதாகக் கருதிய முத்துராஜா, தனது அக்காவைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
நேற்று இரவு, முத்துராஜா தனது நண்பரான புளியங்குளத்தைச் சேர்ந்த வசந்த்(26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சுமித்ராவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டின் வாசலில் வசந்த் காவலுக்கு நிற்க, உள்ளே சென்ற முத்துராஜா தனது அக்கா சுமித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முத்துராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுமித்ராவைச் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித்ரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் முத்துராஜாவும், வசந்தும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த முத்துராஜா மற்றும் வசந்த் ஆகிய 2 பேரையும் சில மணி நேரங்களிலேயே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைதான முத்துராஜா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், குடும்ப மானத்தைக் காக்கவே இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.