

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற அந்த மாணவி வீடு திரும்பாத நிலையில், மறுநாள் காட்டுப்பகுதியில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. எனவே இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மாணவியின் உடலை பெறவும் மறுத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வேடநத்தம் கிராமத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதேனும் இருந்ததா? என போலீசார் விசாரித்தனர். அப்போது, கடந்த 10-ம் தேதி காட்டுப்பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் உள்ள பதிவெண் கொண்டு விசாரித்த போது, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள ஒருவரது வாகனம் என்றும், அது கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனதும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபர் அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளார்.
போலீசார் சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள காற்றாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டிச்சென்றது தெரிந்தது. அந்த வீடியோ காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன்(எ) தர்மமுனீஸ்வரன் (வயது 37) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளதும், ரவுடி பட்டியலில் இருந்ததும், ஒரு குற்ற வழக்கில் தினமும் தூத்துக்குடி கோர்ட்டில் கையெழுத்திட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் பகுதியில் 65 வயது மூதாட்டி பாலியல் துன்புறுத்தலில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தர்மமுனீஸ்வரன் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார் தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் விசாரித்து கடந்த 2022-ம் ஆண்டு தர்மமுனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி தர்மமுனீஸ்வரன் ஜாமீனில் வெளியே வந்தார். கோர்ட்டு உத்தரவுபடி அவர் தினமும் தூத்துக்குடி மகளிர் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி கோர்ட்டில் கையெழுத்திட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சாயல்குடி பகுதியில் வந்து கொண்டு இருந்த அவரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானதாக போலீசார் தெரிவித்தனர். அதாவது, கடந்த 10-ம் தேதி தூத்துக்குடி கோர்ட்டில் கையெழுத்திடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தர்மமுனீஸ்வரன் வந்தார். பின்னர் அவர் மாணவியின் ஊர் காட்டுப்பகுதி வழியாக சென்றார். அப்போது, அங்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வந்த மாணவியை அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி கொடூரமாக கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். தர்மமுனீஸ்வரனை தூத்துக்குடிக்கு அழைத்து சென்று மாணவியை எப்படி கொலை செய்தார்?, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தர்மமுனீஸ்வரனுக்கு இன்று உடல்தகுதி பரிசோதனை நடைபெற்றதை அடுத்து அவரை போலீசார் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு தர்மமுனீஸ்வரனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதோடு, மீண்டும் அவரை ஏப்ரல் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டுள்ளார்.